எனக்கு இன்னொரு பேர் இருக்கு விமர்சனம்

Enakku Innoru Per Irukku Review

ஐயா என் பேரு மாணிக்கம், எனக்கு இன்னொரு பேரு இருக்கு, இந்த வசனத்தை யாராலும் மறக்க முடியாது. சூப்பர் ஸ்டாரின் பென்ச் மார்க் டயலாக். இதையே படத்தின் தலைப்பாக பயன்படுத்தி வெர்ஜின் பாய் ஜி.வி அடுத்து களம் கண்டுள்ள படம் தான் எனக்கு இன்னொரு பேர் இருக்கு.

தன் முதல் படத்தின் ஹிட் கூட்டணியான இயக்குனர் சாம் ஆண்டனுடன் கைக்கோர்த்து பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான லைகாவுடன் டீம் அமைத்துள்ளார். இந்த படம் இன்று உலகம் முழுவதும் பல திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஜி.வி. திரைப்பயணத்திலேயே இது தான் அதிகம்.
கதைக்களம்

ராயபுரத்துலேயே வெயிட்டு நைனா நாற்காலி தான். அந்த நைனா நாற்காலிக்கு போட்டிப்போட்டு ஏற்கனவே நைனா நாற்காலியில் இருப்பவரை ஸ்கெட்ச் போட்டு தூக்குகிறது சரவணன், விடிவி கணேஷ், மொட்டை ராஜேந்திரன் குரூப்.

இதில் சரவணன் நைனாவாக மற்ற இருவருக்கும் கோபம் வருகிறது. இதைத் தொடர்ந்து ஒரு கட்டத்தில் சரவணனுக்கு முன்பு போல் வீரமாக சண்டை போட முடியவில்லை.

இதனால் தன் மகள் ஆனந்தியை திருமணம் செய்ய வேண்டும், அதே சமயம் ராயபுரத்தையும் கண்ட்ரோல் செய்ய வேண்டும், என்பதற்காக அடுத்த நைனா யார் என்று தேடுதல் நடக்கின்றது.

ஜி.வி.பிரகாஷ் செல்லும் இடத்தில் தற்செயலாக கொலை நடக்க, ஜிவி தான் இந்த கொலையை செய்துள்ளார், மிகவும் தைரியமான ஆள் இவர் தான் அடுத்த நைனா என கருணாஸ், யோகிபாபு ஆகியோர் ரெபரன்ஸ் செய்கின்றனர்.

ஆனால், உண்மையாகவே ஜி.விக்கு இரத்தத்தை கண்டால் பயம், இவர் எப்படி ஒரிஜினல் நைனாவானார் என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்

ஜி.வி. பிரகாஷ் இதுநாள் வரை மாணிக்கமாக இருக்கிறேன், பாட்ஷாவாக மாற வேண்டும் என்பதற்காக டார்லிங் இயக்குனர் சாம் ஆண்டனுடன் கைக்கோர்த்துள்ளார், ஆரம்பத்தில் ஜாலியாக அப்படியே த்ரிஷா இல்லன்னா நயன்தாரா கதாபாத்திரம் தான், காதல் தோல்வி, பெண்களை திட்டுவது என இருந்தாலும், ஒரு கட்டத்தில் கதையை உணர்ந்து நடிக்கத்தொடங்கும் இடத்தில் ஒரு முழு நீள கமர்ஷியல் நாயகன் ஆகிவிட்டார் ஜிவி.

படத்தில் பல கதாபாத்திரங்கள், அதில் மிகவும் ரசிக்கப்படுவது கருணாஸ், யோகிபாபு, விடிவி கணேஷ் தான். கருணாஸ் பாகுபலி காளகேயன் மொழி பேசி அதற்கு விளக்கம் கூறும் இடம் சபாஷ், அதேபோல் யோகிபாபு விஜய், அஜித், தனுஷ் என யாரையும் விட்டுவைக்கவில்லை அனைவரின் வசனங்களையும் பேசி கலக்கிவிட்டார்.

இன்றைய ட்ரண்ட் இளைஞர்கள் பயன்படுத்தும் வசனங்களை வைத்தே காட்சிகள் அமைத்திருப்பது படத்தின் பலம், பாகுபலி காட்சி, ப்ரேமம் பாடல், நண்பன் படத்தின் பாடல், வேதாளம் தீம் மியூஸிக் என படத்தில் கைத்தட்ட பல இடங்கள் உள்ளது.

கிளைமேக்ஸில் விடிவி கணேஷ் ஸ்கெட்ச் போடும் காட்சி சூப்பர், அதிலும் வில்லன் கும்பலை கரண்ட் ஷாக் கொடுக்கும் இடம் கைத்தட்ட வைக்கின்றது. ஆனால், படத்தில் லாஜிக் எங்கே என்று எவ்வளவு அலசி ஆராய்ந்தாலும் கிடைத்த பாடில்லை.

ஏன் சார், காமெடி படம் என்பதற்காக எந்த விதமான லாஜிக் காட்சியும் தேவையில்லையா என்ன? கிளைமேக்ஸில் ஜிவி வில்லனை அடிக்கிறார் ஓகே, அதற்காக அத்தனை பயந்த சுபாவம் கொண்டவர் ஒரே செகண்டில் வீரமாக மாறுவது முடியல.
க்ளாப்ஸ்

விடிவி கணேஷ், கருணாஸ், யோகிபாபு செய்யும் கலாட்டா மற்றும் ஜி.வி.பிரகாஷின் நண்பராக வருபவர் தமிழ் சினிமாவிற்கு நல்ல வரவேற்பு.

இன்றைய ட்ரண்ட் இளைஞர்களை கவரும் வசனங்கள், படம் முழுவதும் நகைச்சுவையை கொண்டு வந்தது.

கிளைமேக்ஸில் விடிவி கணேஷ் போடும் ஸ்கெட்ச் காட்சிகள்.
பல்ப்ஸ்

என்ன காட்சிகளை வேண்டுமானாலும் சிரிப்பதற்காக வைப்போம் என்று இஷ்டத்திற்கு மீறிய லாஜிக்.

அழுத்தமே இல்லாத வில்லன் கதாபாத்திரம், ஆண்கள் கைத்தட்ட வேண்டும் என்பதற்காக பெண்களை திட்டுவது போல் வைத்த காட்சி.

படத்தின் பாடல்கள், உண்மையாவே ஜி.வி. தான் படத்திற்கு இசையா???….இசை பொறுப்பை வேறு ஒருவருக்கு கொடுத்திருக்கலாம்.

மொத்தத்தில் எனக்கு இன்னொரு பேர் இருக்கு மாஸ் வசனத்தை வைத்து காமெடி கலாட்டா செய்து தப்பித்துவிட்டார்கள்.