வாகா விமர்சனம்

Wagah

விக்ரம் பிரபு படித்து முடித்துவிட்டு ஜாலியாக பொழுதைக் கழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார். ஆனால், அவரது அப்பாவோ விக்ரம் பிரபுவை தன்னுடைய மளிகைக் கடையில் வேலைக்கு அமர்த்துகிறார். இதனால், தந்தையின் தொல்லையில் எப்படி விடுபடலாம் என்று காத்துக்கொண்டிருக்கும் விக்ரம்பிரபுவுக்கு, அவரது பெரியப்பா மகன் சத்யன் மூலமாக எல்லை பாதுகாப்பு படைக்கு ஆள் எடுப்பது தெரிய வருகிறது. அங்கு சென்றால் எந்நேரமும் சரக்கு கிடைக்கும் என்பதற்காக அதில் சேர முடிவெடுக்கிறார்கள்.

எல்லை பாதுகாப்பு படைக்கான ஆள் தேர்வில் விக்ரம் பிரபு மட்டும் தேர்வாகிறார். சத்யனை உடல் எடையை காரணம் காட்டி நீக்குகின்றனர். அதன்பிறகு, இந்திய எல்லையில் பாதுகாப்பு பணிக்கு செல்லும் விக்ரம் பிரபுவுக்கு அங்கு தனிமை வாட்ட, சொந்த ஊரே பரவாயில்லை என்று முடிவெடுத்து அங்கிருந்து கிளம்ப பார்க்கிறார். அப்போது, எதேச்சையாக நாயகி ரன்யா ராவை பார்க்க, அவள் மீது காதல் கொள்கிறார். அவளுக்காக எல்லை பாதுகாப்பு படையிலேயே இருக்க முடிவு செய்கிறார்.

விக்ரம் பிரபுவும், ரன்யா ராவும் அடிக்கடி சந்தித்து நட்பாகிறார்கள். பின்னர், அந்த நட்பு காதலாக மாறுகிறது. இந்நிலையில், காஷ்மிரீல் உள்நாட்டு கலவரம் வெடிக்கிறது. காஷ்மீரில் உள்ள பாகிஸ்தானியர்கள் எல்லோரும் வெளியேற வேண்டும் என்று போராட்டம் வலுக்கிறது. அப்போதுதான் தெரிகிறது நாயகி ரன்யா ராவ் பாகிஸ்தானி என்று. அதன்பின் பாகிஸ்தானுக்கு செல்லும் ரன்யா ராவுக்கு அங்கு செல்வதில் சில பிரச்சினைகள் ஏற்படுகிறது. அந்த பிரச்சினைகளில் இருந்து அவளை காப்பாற்றி பாகிஸ்தானுக்கு செல்லும் விக்ரம் பிரபு, அங்கு சிறை வைக்கப்படுகிறார்.

எதற்காக அவர் சிறை வைக்கப்படுகிறார்? அங்கிருந்து அவர் தப்பித்து வந்தாரா? தனது காதலியை கரம்பிடித்தாரா? என்பதுதான் மீதிக்கதை.

விக்ரம் பிரபு தோற்றத்தில் அச்சு அசலாக எல்லை பாதுகாப்பு படை வீரர் போல் இருக்கிறார். 6 அடி உயரம், அகன்ற மார்பு என ஒரு போர் வீரருக்கான உடல்வாகுடன் இந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். சண்டைக் காட்சியில் மிரட்டியிருக்கிறார். ஆனால், ரொமான்ஸ் காட்சிகளில்தான் வழக்கம்போல் சொதப்பியிருக்கிறார். ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க விக்ரம் பிரபு இன்னும் கொஞ்சம் கற்றுக்கொள்ளவேண்டும்.

ரன்யா ராவும் அவருடைய கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். படத்தின் கதை முழுக்க இவரைச் சுற்றித்தான் பயணிப்பதால் படம் முழுக்க வருகிறார். கதையின் ஆழம் மற்றும் அவரது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.

மிலிட்டரி என்றாலே போரின் போது மட்டும்தான் அவர்களுக்கு வேலை, மற்ற சமயங்களில் சரக்கு அடித்துவிட்டு, பார்ட்டி கொண்டாடி பொழுதை கழிப்பார்கள் என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறன்றார்கள். ஆனால், வீடு, சொந்தம், பந்தம் என எல்லாவற்றையும் விட்டுவிட்டு, நாட்டிற்காக எல்லையில் யாரும் இல்லாத தனிமையில் வானத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டு படும் அவர்கள் படும் அவஸ்தையான வாழ்க்கையை இந்த படத்தில் சொல்லியிருக்கிறார் ஜி.என்.ஆர்.குமரவேலன். அவர்களுடைய வாழ்க்கையை சொல்ல நினைத்த இவருக்கு முதலில் பாராட்டுக்கள் தெரிவிக்கலாம்.

எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் கதையை சொல்ல வந்தாலும், இந்த படத்தின் மையக்கரு காதல்தான். காதலால் ஒரு மனிதன் எந்த நிலைமைக்கு செல்கிறான் என்பதுததான் கதை என்கிறபோது, அந்த காதல் காட்சிகளை சரியாக சொல்லாதது சற்று படத்திற்கு பின்னடைவாக இருக்கிறது. அதேநேரத்தில், பாகிஸ்தான் சிறையில் இந்தியர்கள் படும் வேதனைகளை இப்படத்தில் அழகாக சொல்லியிருக்கிறார். அதேபோல் வசனங்களும் படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.

டி.இமானின் இசையில் பாடல்கள் படத்திற்கு பெரிய வலு சேர்க்காவிட்டாலும், பின்னணி இசையை வழக்கம்போல் மிரட்டியிருக்கிறார். விக்ரம் பிரபு பாகிஸ்தான் சிறையில் தப்பிக்க நினைக்கும் காட்சிகளில் எல்லாம் இவரது பின்னணி இசை நம்மையும் அந்த காட்சியோடு ஒன்ற வைக்கிறது. சதீஷ்குமாரின் ஒளிப்பதிவு காஷ்மீரின் அழகை இன்னும் அழகாக காட்டியிருக்கிறது. அதேபோல், காடு, மலைகளும் அழகாக காட்டியிருக்கிறது. லால்குடி இளையராஜாவின் பாகிஸ்தான் அரங்குகள் உண்மையான பாகிஸ்தானுக்குள் நுழைந்த அனுபவத்தை கொடுக்கிறது.

மொத்தத்தில் ‘வாகா’ விறுவிறுப்பு கூட்டியிருக்கலாம்